søndag 24. mai 2009

நந்திக்கரையில் கொல்லப்பட்டவர்களின் நிலை என்ன?


தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்வை நோக்கியதான பார்வையை ஆழப்படுத்த வேண்டும்....

நந்திக்கரையில் இடம்பெற்ற மனித அலவம் மூடிமறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வாக இருக்கின்றது. நாம் அங்கு கொல்லப்பட்ட மக்களுக்காக இரங்குகின்றோம், துக்கம் அனுசரிக்கின்றோம், இதற்காக மெழுகுதிரி கொழுத்துக்கின்றோம், கறுப்பு உடை உடுத்துகின்றோம் இவைகள் எல்லாம் எமது மானசீகமான உணர்வலைகளின் வெளிப்பாடு. மானசீகமான வெளிப்பாடுகள் அரசியல் ரீதியான வெளிப்பாடுகளை எந்த வேளையிலும் வெளிப்படுத்துவது இல்லை. மானசீகமான வெளிப்பாடுகளுக்கு அரசியல் வடிவம் கொடுக்கின்ற போதே சமூகத்திற்கு கடமையாற்றல் கூடிய ஆற்றலைக் கொடுக்க முடியும்.

சமூகத்திற்கு கடமையாற்றக்கூடய செயற்பாடுகளை கொடுப்பது என்றால் தற்கால சூழலை துல்லியமாக அவதானித்தே அதில் இருந்து அரசியல் வடிவமைத்துக் கொள்ளும் போராட்டங்களாகும். இவற்றைச் செய்வதற்கு தற்பொழுது மலடாகிப்போன சமூக அமைப்பில் இருந்து ஒரு தெளிந்த பார்வையை நோக்கியதான ஒரு ஆலோசனையை நோக்கி உரையாடல் அவசியம். இவைகள் காலம் தாழ்த்தி செய்ய முடியாது.

சரணடைந்தவர்கள் நிலை என்ன?
முகாம்களில் கைதுசெய்யப்படுபவர்களின் நிலை என்ன?
நந்திக்கரையில் கொல்லப்பட்டவர்களின் நிலை என்ன?
திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழும் மக்களின் நிலை என்ன?
இவற்றிற்கான கேள்விகளின் இருந்து இன்று செயற்பாடுகள் அமைதல் வேண்டும். இதனை விடுத்து மானசீகமான செயற்பாடுகளும், பிரேதபரிசோதனைகள் போல செய்யப்படும் விமர்சன ஆய்வுகளும் அல்ல இன்று முக்கியம். விமர்சனம் என்பது ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் கடந்தகால தவறுகள், சாதக- பாதக நிலைகளை உள்வாங்கிக் கொண்டு செல்கின்ற போது செய்யப்படும் சுயவிமர்சனமே நடைமுறையின் ஊடான செயற்பாடாகும்.


முதலில் ஒரு சுதந்திரமான விவாதக்களம் ஒன்று அவசியமானதாகும். நாம் எம்மை மீள்தூக்கிப்பார்ப்பதற்கு சந்தர்ப்பத்தைக் கொடுப்போம். நாம் உரையாட எண்ணுவதும் ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவிதி பற்றியதாகும். ஒரு சமூகத்தின் அவலத்தைப் பற்றிய ஆய்வு என்பது மறுபடியும் மீள்வடிவம் கொடுக்கும் நிலையில் இருந்து உருவாக்கப்பட வேண்டும். இவைகள் (முன்னர் இவ்வாறான கருத்துக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது) போராடும் களத்தில் இருந்து இடம்பெற வேண்டும். இன்றைய பாசீச இருள் நிறைந்த தேசத்தில் இவைகள் சாத்தியம் இல்லை. ஆனால் ஜனநாயக(?) நாடுகளின் வாழும் நாம் மீளாய்விற்கு செல்லவேண்டிய வரலாற்றுத் தேவை இருக்கின்றது.
நாளில் இருந்து இன்று வரை பலமாற்றங்களை கடந்து வந்திருக்கின்றது. இதில் குறிப்பாக சர்வதேச சமூகத்தின் ஆதரவு அல்லது கவனம் வன்னி மக்கள் மீது கிடைக்க வேண்டும் என்பதற்காக முயற்சியும் நடைபெற்றது. இருந்த போதிலும்

எங்கள் தலைவர் பிரபா
ஏகதலைமை
தடையை நீக்கு

என்பதான கோரிக்கைகளே முதன்மை பெற்றிருந்தது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்தக் கோரிக்கை அல்லது எந்த கோரிக்கை என்றாலும் சர்வதேச பொருளாதார அமைப்பில் எவ்வகையான நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிந்திரான கோரிக்கைகள் கோசங்கள் வெற்றியைக் கொண்டு வரப்போவதில்லை. இந்த நிலை முழு நிலப்பரப்பும் பாசீச அரசின் வசம் வந்த பின்னரும் மாற்றம் கொள்ளப்படவில்லை.
வன்னி நிலப்பரப்பு அரசின் வசம் வந்தபின்னரான களநிலவரம் மாற்றம் கொண்டுள்ளது. தாயை இழந்த கன்றுகள் போல தேசபக்தர்கள் இருக்கின்றனர். இவற்றிற்கு காரணம் அரசியல் ரீதியாக மக்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை. போராட்டத்தை வேறுபாதையில் சிந்திப்பதற்கு முயலவில்லை அல்லது முடியவில்லை என்பதையே கடந்த ஒரு வாரகாலம் சுட்டிநிற்கின்றது.
கடந்த போராட்டங்கள் எவ்வித திசைநோக்கி நடைபெற்றது? போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு அனுபவத்தை பெற்றுள்ளார்கள் என்பதை அவதானிப்போம்.
அவர்களில் ஒருவரான நிமலன் கருத்து தெரிவிக்கையில்
" அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களால் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு விடிவை பெற்று தர முடியும். ஆகவே ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனைவரும் பிரித்தானிய நோக்கியும், கனடாவில் வாழ்பவர்கள் அமெரிக்கா நோக்கியும் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். தமிழரின் போராட்டம் இப்போது தான் ஆரம்பித்துள்ளது. நிச்சயம் ஒரு முடிவு காணும" என தெரிவித்துள்ளார் .
இதேவேளை சுவீஸ் இளையோர் ஐ.நா மனித உரிமை ஊழியர்களை சந்திப்பின் பின்னர். ஐ.நா ஊழியர்கள் தெரிவித்த கருத்தானது இளையோரை ஐ.நா மீதான நம்பிக்கையை தகர்த்தெறிந்தது. அதாவது ஐ.நா ஊழியர்கள் பிரச்சனைப் பகுதிக்கு செல்வதாயின் அரசின் அனுமதி தேவை, கண்டபடி தம்மால் எந்தப்பகுதிக்கும் நுழையவோ காத்திரமாக முடிவுகள் எடுக்கவோ முடியாது எனத் தெரிவித்துக் கொண்டதை கேட்ட இளையோருக்கு அவர்களின் வார்த்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
அப்போ ஒரு இளைஞர் தமது நேரத்தை தெருவில் போராடுவதில் அர்த்தம் இல்லை என தெரிவித்துக் கொண்டதுடன், அதுதான் தலைவர் சொன்னார் இளையோராகி தம்மில் தான் போராட்டம் தங்கியிருப்பதாக கூறி தொடர்ந்தும் போராட வேண்டும் என திடசங்கர்ப்பம் பூண்டார்.
எவ்வாறு போராடப் போகின்றார்கள்? எவ்வகையான கருத்தமைவிற்கு உட்பட்டுப் போராடப் போகின்றார்கள்? இவைதான் முன்னெழுகின்ற கேள்வியாகும்.

ஆனால் இதுவரை அன்னிய சக்திகளை எமது தேசவிடயங்களில் தலையிடக் கோரியதான கோசங்கள் தான் முன்வைக்கப்பட்டது.
1. ஐ.நாவில் பிரச்சனை எழுப்பப்படுவது கூட அங்கீகாரமாக கருதும் அரசியல் போக்கு
2. அமெரிக்க அரசியல் உயர்மட்டம் தமிழர்களின் நிலையை அலசுகின்றனர் என்ற அரசியல் கருத்துப் போக்கு
3.மற்றைய நாடுகளின் அரசியல் மட்டத்தில் அலசுவது கூட அங்கீகாரம் கிடைத்தற்கு ஒப்பாக கருதும் அரசியல் போக்கு


இனி ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் நம்ப வேண்டும், இவ்வாறாக கருத்தமைவிற்கும் மக்களின் அழிவில் இருந்து உருவாக்கப்படும் அசாதாரான நிலையில் வெளியில் இருந்து தலையீடு இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர். இவர்களுக்கு முழு நம்பிக்கையை வளர்த்து விட்டது. இந்த ஜனநாயக உரிமையை பெற்றுக் கொள்வற்காக புறப்பட்ட தேசியப் போராட்டமானது சீரழிந்து இன்று மேற்கு தேசங்களின் லொபி நடவடிக்கை மூலம் உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அவல நிலைக்கு வந்து விட்டது. விடுதலைக்காகப் புறப்பட்ட இயக்கத்தை உருவாக்கி சீரழித்து, கைக்கூலியாக்கிய பின்னர் கொண்றெழிக்கும் நிதிமூலதனத்தின் நலன் பின்னால் இயங்கும் அரசுகள். இன்று புலியின் பெயரால் மக்களை கொல்கின்றது. இன்று கொல்லப்படும் மக்களை பாதுகாக்க சர்வதேச சதிகளை அம்பலப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
இவ்வாறே தமது தலைமையை கொண்றொழித்துவிட்டு அடுத்த நிலைக்குச் செல்வதில் தடையாக இருக்கின்றனர்.
இவர்களின் லொபி நடவடிக்கையே பரமேஸ்வரனின் உண்ணாவிரதப்போராட்டம் நிறுத்தப்பட்டது. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன? அதில் உள்ளடங்கிய விபரம் என்ன? இவைகள் வெளியிடப்பட வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் போராட்டங்களை திசைதிருப்ப அல்லது முறியடிக்க பலவழிகளை மேற்கு தேசங்கள் மேற்கொள்கின்றது. இந்தப் போராட்டங்கள் உணர்வலை மேலோங்கியிருப்பதால் போராட்டங்களை முழுமையாக முறியடிக்க முடியவில்லை. மேற்கு உலகமும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு எதிரி என்பதை புரிந்து கொள்ளவில்லை.
இந்தியாவும், கம்யூனிசப்பூதமான சீனாவும்(?) உதவியிருக்கின்றது என்பதினால் தமது நட்பு சக்தியாக மேற்கை நம்பும் தேசபக்தர்கள். நந்திக்கரையில் சிந்தப்பட்ட உதிரத்திற்கு அனைத்து வல்லரசுகளும் உடத்தையாக இருந்திருப்பதை அறிய வேண்டும்.
நந்திக்கரை இரத்த ஆறுபற்றி செய்மதியூடாகவும், அரச மட்டத்திலும் இராணுவ மட்டத்திலும் பரஸ்பரம் கருத்தக்களை பரிமாறிக் கொண்டே இருந்திருக்கின்றனர். இதற்கு ஒரு சாட்சியாக 'பாதுகாப்பு வலயத்தில் என்ன நடந்தது என்பது சர்வதேச சமூகத்திற்கு தெரியும் - அமெரிக்க தூதுவர் பிளேக் தெரிவிப்பு "
இதேபோல தொழில்நுட்பத்தின் உதவியும் அரசிற்கு கிடைத்திருக்கும். இதோ 'வடபகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்ற பகுதிகளை இரகசியமான முறையில் அவதானித்த அமெரிக்காவின் இராணுவ செய்மதிகள் எடுத்த ஒளிப்படங்களின் அடிப்படையில்இ போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியுமா என்பதையிட்டு அமெரிக்க அதிகாரிகள் கவனமாகப் பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது அமெரிக்க இராணுவச் செய்மதி மூலம் பெறப்பட்ட இந்த ஒளிப்படங்கள் முன்னர் பெறப்பட்ட ஒளிப்படங்களை விடவும் அதிஉயர் திடத்தன்மையைக் (higher resolution) கொண்டதாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் 'ரைம்ஸ் ஒன்லைன்'"

இதேபோல பிரபாவிடம் இருந்து பெற்றதாக காட்டப்படும் கையடக்கத் தொலைபேசி என்பதே தலைவரின் நடமாட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும். இவைகள் மாத்திரம் அல்ல புலிகளுள் இருக்கின்ற உளவாளிகளும் தமது பங்கிங்கு உதவியிருக்கின்றார்கள்.
இவற்றை அறிவதற்கு தடையாக இருப்பது வர்க்க பேதமேயாகும். ஒரு பகுதி சதிக்கு உட்பட்டுச் செல்ல மற்றைய பகுதியினர் உண்மை தேசபக்தர்களாக இருக்கின்றனர். இவை எவ்வாறு சாத்தியம்? இதனைப் பார்ப்போம்.

புலிகளின் ஆதரவாளர்களை எடுத்துக் கொள்ளும் இடத்தில் வர்க்க பேதங்கள் இருப்பதும், இந்த வர்க்கத்தவர்களிடையே பிரச்சனையை புரியும் பலமும் மாற்றம் கொள்கின்றது.

- பாமர தேசபக்தர்கள்: இவர்களின் அரசியல் அறிவு புலிகளின் பிரச்சாரத்தினால் உள்வாங்கப்பட்டவர்கள். இவர்கள் தமது நடைமுறைவாழ்க்கையின் ஊடாக போராடும் சக்தியாக புலிகளை நம்புகின்றனர். இவர்கள் அரைநிலபிரபுத்துவ சிந்தனைக்குள் ஊறிவளர்ந்தவர்கள். இருந்த போதிலும் மேற்கு சமூக உறவினை அரைகுறையான புரிதலின் மீதான சமூக உறவு அமைந்திருக்கின்றது. இவர்களே முதன்மை புலி ஆதரவாளர்களாக இருக்கின்றனர். இவர்களின் பொருளாதாரத்தில் பலம்பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களே நிதியினை அள்ளிக் கொடுப்பவர்களாவும் இருக்கின்றனர்.

- இளையோர் இவர்கள் சிறுவயதாகவும் பள்ளி செல்பவர்களாகவும் இருக்கின்றனர் மற்றையவர்கள் இங்கு படித்து பிரமுகர்களாக உருவாக முயற்சிப்பவர்கள் இதில் அடங்குகின்றனர்.

- உயர் உத்தியோகம் பார்ப்பவர்கள், பொருளாதாரத்தில் வசதிபடைத்தோர், மொழியறிவு கொண்டவர்களாக இருப்பதனால் இங்குள்ள அதிகாரவர்க்கத்துடன் தொடர்பு கொள்ளத்தக்கவர்களாக இருக்கின்றனர்.
இத்துடன் ஓரு சிறுபகுதி சொத்துக்களைக் கொண்டவர்களாகவும், நிதியினைக் கொண்டவர்களாவும் இருக்கின்றார்கள். இவர்களின் ஒரு பகுதியினரிடம் மக்களிடம் சேர்க்கப்பட்ட நிதியானது முடங்கிக் கிடப்பதால் சொத்துக்களை கொண்டவர்களாவும், இவர்களின் நலன் அமைப்பினுள் பாதுகாக்கும் நிலையை கொண்டவர்களாவும் தற்பொழுது உருவாகியிருக்கின்றார்கள்.
இந்த மூன்றாம் பிரிவினரே புதிய அதிகார வர்க்கமாக உருவாயிருக்கின்றார்கள். இந்த வர்க்கத்தின் ஓரு பிரிவினரே காட்டிக்கொடுப்பிற்கும், போராட்டத்தை சிதைப்பதற்கும் காரணமாக இருக்கின்றனர்.


இந்த வர்க்கப்பிரிவினரிடையே பிரச்சனைக்கான தீர்வை கொண்டு செல்வது ஒன்றும் இலகுவாக விடயம் அல்ல. பாமர தேசபக்தர்களை போராட்டத்திற்கு இசைவாக கொண்டுவருவதற்கு புதிய அதிகாரவர்க்கம் என்பது எப்பொழுதும் தடையாகவே இருக்கும்.


புலிகள் அன்னியத் தலையீட்டை எதிர்பார்த்திருந்தார்கள், அதேவேளை தேசபக்தர்களும் அன்னியத் தலையீட்டை எதிர்த்திருந்தார்கள். அன்னிய நிறுவனங்கள் எல்லாம் இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் இருந்து செயற்படுகின்றன. முதலாளித்துவம் நிலைக்க வேண்டுமென்றால் தமது சுரண்டலுக்கு சுதந்திரமான உழைப்பாளிகள் இருக்க வேண்டும் என்பதற்கான ஜனநாயக வடிவம் கொண்டு செயற்படுகின்றன. தமது பொருளாதார நலனைப் பேணிக் கொள்வதற்கு வசதியாக தனது ஜனநாயக் குரலை வெளிப்படுத்திக் கொள்ளும். அதனை நாம் எல்லோரும் நமக்கான குரல் என்று பூரிப்போம். இவைகள் எல்லாம் பலதேசிய கொம்பனிகளின் நலன் என்பதை நாம் அறியப் போவதில்லை. ஆனால் நான் வலிமை அற்றவர்கள் எமக்கு இவ்வாறு ஒபாமா குரல் கொடுக்கின்றார் தமிழ்நாட்டு பாசிச ஜெயா குரல் கொடுக்கின்றார் நாம் அதனை ஏற்றுக் கொள்வோம் என்பதே பாமர தேசபக்தர்களின் நிலை.

இந்த அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டதுதான் (தேசியத்தை உடைப்பதற்கு) தன்னார்வ நிறுவனங்கள், ஐ.நா அமைப்பும் அதன் உப அமைப்புக்களும் ஆகும். இதேபோல மேற்கத்தை ஜனநாயகக் கோசங்கள் கூட பொருளாதார நலனுக்கு உட்பட்டதாகும்.

நீங்கள் எம்மக்களை காப்பாற்றுங்கள் என்று கூப்பிட்ட போது வராதவர்கள் இன்று (பான்கீமூன், நம்பியார்) வந்து எம்மக்களைப் பார்த்துச் சென்றார்கள். இவர்களைப் பொறுத்தவரை உரிமைக்கு போராட எவ்வித ஆயுதக்குழுவும் தேவையில்லை. சர்வதேச பொறுப்பாளர்கள் போன்ற லொபியிஸ்டுக்கள் இருந்தால் போதும் என்று கருதுகின்ற காரணத்தினால் இன்று உலகப் பிரதிநிதிகள் வந்து போகின்றார்கள்.
புலிகள் சரணடைவதற்கு இடைத் தரகுப் பணியாற்றுமாறு கெஞ்சினர் : Marie Colvin;. இதேபோல நம்பியாரை தொடர்பு கொண்டுள்ளார்கள். இங்கு மக்கள் போராட்டத்திற்கும் லொபிக்கும் வித்தியாசம் தெரியவேண்டும்.
மக்களை நம்பாது அசாதாரன முறையில் புலித்தலைமை தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை விட்டு லொபிக்களை நம்பி தமது உயிரைப் போக்கியுள்ளனர்.


அரசியல் உரிமை
நாளாந்த வாழ்க்கை
இவை இரண்டையும் இணைத்தான நடவடிக்கைள் அமைதல் வேண்டும். ஒன்றை ஒன்று அன்னியப்படுத்த முடியாது. ஆனால் ஒவ்வொன்றையும் வெவ்வேறு தளங்களில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நாம் போராட்டம் என்ற பதத்தை மீளவும் பயன்படுத்த பயப்பட வேண்டியதில்லை. மனித வாழ்க்கையே போராட்டம் போராட்டம் தான். மாற்றம் ஒன்றே மாறாத நிலையில் இன்று மக்களின் உயிர் கொத்தாக இழக்கும்நிலை மாத்திரம் தற்காலிகமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அழிப்பு யுத்தத்தில் காயமடைந்தவர்களின் நிலைமோசமாகி அவர்கள் மரணிக்கவும் முடியும். கொல்பவனும் கொல்லக்குடுப்பவனும் என்ற நிலைமாறியிருக்கின்றது. இந்த மாற்றங்கள் இருவர் என்ற நிலையில் இருந்து இனி அரசு என்ற நிலையில் அழிவுகள் மேற்கொள்ளப்படப்போகின்றது. பாசீசத்திற்கு எதிரான போராட்டம் என்பது பரந்துபட்ட தளத்தில் ஐக்கியத்துடன் நடைபெறவேண்டிய தேவை இருக்கின்றது.
அகதிவாழ்க்கையின் சோகம் தொடர்ச்சியாக எமது மக்களிடத்தில் இருக்கின்றது. அகதிகளாக திறந்தவெளிச் சிறையில் வசிப்பவர்கள். மாற்றி உடுத்த உடுப்புக்கள் இல்லாது அல்லல்படுவதை உலகத்தின் கண்களுக்கு கொண்டு வரமுடியவில்லை. திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் விருந்தினர்கள். எல்லாவசதிகளும் கிடைக்கும் சிறைச்சாலைகளுக்கே கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு வசிக்கும் மக்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போது தமக்கான தேவைகள் இன்;னும் பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறுகின்றனர்.
போதிய உணவு
மாற்ற உடை
தனிப்பட்ட வாழ்க்கை இல்லாது போயிருக்கின்றது
பிள்ளைகளின் கல்வி
உறவுகளுடன் ஏற்படுத்தக் கூடிய சுதந்திரமான தொடர்புகள்
யுத்தப்பிரதேசத்தில் இருந்த காரணத்தினால் ஏற்பட்ட மனஅழுத்தங்கள்
தொற்றுநோய்
புலி என்று பிடித்துச் செல்லப்படும் இளம் சந்ததி இல்லாது ஒழிப்பது நீண்ட காலத்திற்கு நோக்கில் இனவெறி அரசிற்கு அவசியமானதாக இருக்கின்றது.
அல்லல்படும் மக்களின் தேவையும் அதற்கான நிவர்த்தியின் அடிப்படையில் அமைந்து கோசங்களும் கோரிக்கைகளும் முதன்மை கொண்டு சர்வதேசமெங்கும் நிகழ்ச்சிநிரலாக்கப்பட வேண்டும்.
இன்று திறந்தவெளிச்சிறையில் வாழ்பவர்கள் ஒரு புறம் பிடித்துச் செல்லப்படுபவர்களும் சரணடைந்த இரண்டாம் மூன்றாம் நிலை தலைமைப் போராளிகளின் நிலையும் கவனத்தில் கொண்டதான போராட்டங்கள் மிகமுக்கியமாக அவசியமாகின்றது. மூன்றாம் நிலைத் தலைவர்கள் பலர் குடும்பத்துடன் வந்த வேளை அவர்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர் (பாதுகாப்புக் காரணத்திற்காக இங்கு பெயர் குறிப்பிடவில்லை). இவர்களின் நிலை என்ன?
எமது மக்களின் போராட்டம் என்பது ஆயுதத்தை நம்பி ஒரு அமைப்பின் தவறான அரசியலானது மேற்கு, போலிகம்யூனிச சீனா, இந்திய, யப்பான் என்ற நான்கு பேய்களின் திரைக்குப் பின்னால் இடம்பெற்ற சதிக்குள்ளாகி பலபோராளிகளும், மக்களும் செத்து மடிந்திருக்கின்றார்கள்.


'மரணத்தைக் கண்டு
நாம் அஞ்சவில்லை
ஒரு அனாதைப் பிணமாய்
ஒரு அடிமையாய்
புதிய எஜமானர்களுக்காக
தெருக்களில் மரணிப்பதை
நாம் வெறுக்கின்றோம். "
மாற்றம் வரவேண்டியது எங்கிருந்து?
நாம் எவ்வித புதிய எஜமானர்களுக்காக மரிக்கத் தயாராக இல்லை என்பதை பிரகடனப்படுத்துவோம்.

சரணடைந்தவர்கள் நிலை என்ன?
முகாம்களில் கைதுசெய்யப்படுபவர்களின் நிலை என்ன?
நந்திக்கரையில் கொல்லப்பட்டவர்களின் நிலை என்ன?
திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழும் மக்களின் நிலை என்ன?


இவற்றில் இருந்து புதிய பாதையை ஆரம்பிப்போம்!
-----------------------------.......


இளம் போராளிகளைப் பர்துகாப்பதும், அடுத்த கட்டத்திற்கானபோராட்டத்திற்கு வழிகாட்ட வேண்டிய நிலையில் இருந்துதான் கருத்துக்கள் அமைதல்வேண்டும். புலிகள் பாசீச சக்தி என்பது ஒரு முடிவானதொன்றாகும். இதில் இருக்கும்சக்திகளை அடுத்தநிலைக்கு நகர்த்துவது என்பது கூட ஒரு வரலாற்றுக் கடமைதான்.வரலாற்றுத் தவறுகளை வெற்றிப் படிகளாக மாற்ற வேண்டிய பொறுப்பும்பொதுவுடமைவாதிகளுக்கு உண்டு. பலவர்க்கங்களின் கலவைதான் தமிழ் சமூகம் இதில்ரெடிமேட் புரட்சியாளர்கள் இருக்கப்போதில்லை. வரலாற்றுப் படிப்பினைகள் இவர்களை தமது உண்மை வர்க்க எதிரியை இனம் கொள்ளச் வைக்கின்றது.

Ingen kommentarer:

Legg inn en kommentar